மாணவிகளுடன் பந்து விளையாடிய கவர்னர் தமிழிசை


மாணவிகளுடன் பந்து விளையாடிய கவர்னர் தமிழிசை
x

புதுவை அரசுப்பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவிகளுடன் பந்து விளையாடினார்.

புதுச்சேரி

புதுவை அரசுப்பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவிகளுடன் பந்து விளையாடினார்.

புத்தகப்பை இல்லாத நாள்

புதுவையில் உள்ள பள்ளிகளில் மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகப்பை இல்லா நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும், விளையாடி மகிழவும், கைவினைகளை கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி புத்தகப்பை இல்லா நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் யாரும் புத்தகப்பை கொண்டுவரவில்லை.

ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

அவர்கள் பள்ளிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கைவினை பொருட்களும் தயாரித்தனர். பாட்டுப்போட்டி, விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இன்றைய தினம் முழுவதும் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என இருந்தனர்.

அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் வழக்கம்போல் புத்தகப்பையுடன் பள்ளிகளுக்கு வந்திருந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில் இன்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வைத்திக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரை மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளி மைதானத்தில் மாணவிகள் வரைந்த கோலங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். சிறந்த கோலங்களுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கினார்.

பந்து விளையாடினார்

அதன்பின் மாணவிகளுடன் அவர் பந்து விளையாடினார். மாணவிகள் சுற்றி நின்று பந்துகளை எடுத்துபோட அவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஓடியோடி பிடித்தார். தொடர்ந்து மாணவிகள் தயாரித்த கைவினை பொருட்களையும் அவர் பார்வையிட்டு பாராட்டினார்.

புத்தகப்பை இல்லா நாள் எப்படி இருக்கிறது? என்று மாணவிகளிடம் கேட்டார். அவர்களும் மிகவும் ஜாலியாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறும்போது, புதுவையில் புது முயற்சியாக இந்த புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல திட்டம். இதனால் மாணவர்களுக்கான மனஅழுத்தம் நீங்கும். தனியார் பள்ளிகளிலும் இதை கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

சாரம் அரசுப்பள்ளி

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் மழலையர் வகுப்பறையை பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி அவர்களுக்கு குதூகலமூட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை வாங்கி அதனை ருசித்து பார்த்தார்.


Next Story