குடியிருப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இயலாது


குடியிருப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இயலாது
x

புதுவை பல்கலைக்கழகத்தில் குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய இணை மந்திரி சுபாஷ் சர்கார் தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை பல்கலைக்கழகத்தில் குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய இணை மந்திரி சுபாஷ் சர்கார் தெரிவித்தார்.

இடஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் புதுவை எம்.பி. வைத்திலிங்கம், புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள 150 பாடப்பிரிவுகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதை அரசு அறியுமா? அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடஒதுக்கீடு கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் 2013-ல் சமர்ப்பித்த முன்மொழிவு இன்னும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் அளித்த பதில் வருமாறு:-

வழங்க இயலாது

மத்திய பல்கலைக்கழகங்களின் சட்ட விதிமுறைகளின்படி குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது. மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம்-2006 மூலம் அவ்வப்போது திருத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றுவரை அமைச்சகத்தில் புதுவை பல்கலைக்கழகத்தில் இருந்து 25 சதவீத இடஒதுக்கீடு கேட்ட எந்த முன்மொழிவும் நிலுவையில் இல்லை.

புதுவை பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 21 பாடப்பிரிவுகளில் 25 சதவீதம் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் எம்.பி.ஏ. (வர்த்தக மேலாண்மை) படிப்பில் 20 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) எம்.காம் (வர்த்தக நிதி) ஆகிய பாடப்பிரிவுகள் புதுவை பல்கலைக்கழகத்தை சார்ந்த புதுவை வளாக கல்லூரிகள் மற்றும் காரைக்காலில் உள்ள கிளை வளாகத்திலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பாடப்பிரிவுகளை பொறுத்தவரை 25 சதவீத இடஒதுக்கீடு புதுவை மாணவர்களுக்கு அந்தந்த பிராந்திய அடிப்படையில் வழங்கப்படுகிறது.

முன்மொழிவு பெறப்படவில்லை

புதுவையை சேர்ந்த 10 மாணவர்கள் தகுதி அடிப்படையில் எம்.எஸ்.சி. (பயோ டெக்னாலஜி) படிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கு பின் தொடங்கப்பட்ட 36 முதுநிலை பாடப்பிரிவுகளிலும், 10 ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளிலும், 2 முதல்நிலை பட்டய படிப்புகளுக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மேலும் மத்திய கல்வித்துறையை பொறுத்தவரை, புதுவை பல்கலைக்கழகத்தில் இருந்து 2013-ம் ஆண்டு எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை. ஆனால் 15-10-2021 அன்று புதுவை மாநில முதல்-அமைச்சரிடம் இருந்து இதுசம்பந்தமாக ஒரு கடிதம் பெறப்பட்டு அந்த கடிதத்துக்கும் 11-1-2022 அன்று பதில் அனுப்பப்பட்டு விட்டது.

இவ்வாறு மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளார்.


Next Story