தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
x

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

புதுச்சேரி கோரிமேடு போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 36). புதுவை எழில்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

விஜயபாஸ்கர் தனக்கு தெரிந்த புதுவை சங்கரன்பேட்டை காமன் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என லூர்து பெலிக்சிடம் கூறியுள்ளார்.

நகைகளை அடகு வைத்து முதலீடு

இதனை நம்பி லூர்து பெலிக்ஸ் அவரிடம் 2 தவணையாக ரூ.5 லட்சம் கொடுத்தார். இதற்கான பங்கை ராஜசேகர் சரியாக கொடுத்த விட்டார். மேலும் பெரிய அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய லூர்து பெலிக்ஸ் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சத்தை கடந்த 5.11.2020 அன்று ராஜசேகரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் 2 மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக கூறி அதற்கான முன்தேதியிட்ட காசோலையை லூர்து பெலிக்சிடம் வழங்கினார்.

மோசடி

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மேலும் பணம் தேவைப்படுவதால் கொடுத்து உதவும்படி ராஜசேகர் கூறியுள்ளார். இதையடுத்து லூர்து பெலிக்ஸ், அவரது நண்பர் விஜயபாஸ்கர் மற்றும் இன்னொருவருடன் சேர்த்து 16 பவுன் நகைகளை வாங்கி ராஜசேகரிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ஒரு அடகுகடையில் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் ராஜசேகர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

லூர்து பெலிக்ஸ் அவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது, அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம். இதையடுத்து அவர் ஏற்கனவே கொடுத்திருந்த முன்தேதியிட்ட காசோலையை லூர்து பெலிக்ஸ் வங்கியில் கொடுத்தபோது அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார்

இதுபற்றி தெரிவிக்க அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது, முடியவில்லை. இதனால் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த லூர்து பெலிக்ஸ், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story