புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு....!


புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு....!
x

புதுச்சேரியில் கடந்த 16-ம் தேதி முதல் நேற்று வரை 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

புதுச்சேரி,

கடந்த சில நாட்களாக தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல் இந்தியா முழுமையுமே ஒருவகை விஷக்காய்ச்சல் வேகமாக பரவியது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை சமாளிக்க பல்வேறு மாநில அரசுகளும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

விஷக்காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. மருத்துவமனைகள், மருந்தகங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் அந்த காய்ச்சலுக்கு பள்ளி சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் இன்று நேற்று வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

அதையடுத்து புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு, நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story