நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையா? குழப்பத்தை ஏற்படுத்திய செய்தி.. தேர்தல் ஆணையம் மறுப்பு


நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையா? குழப்பத்தை ஏற்படுத்திய செய்தி.. தேர்தல் ஆணையம் மறுப்பு
x

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டிருப்பதாக சத்தீஷ்காரில் செய்தி வெளியானது. இது தொடர்பாக ஒரு நாளிதழின் பக்கத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்திருந்தனர். இந்த முறை வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வியுடன் இந்த தகவல் வேகமாக பரவி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

'போலி செய்தி உஷார்' என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அல்லாமல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக சத்தீஷ்காரில் உள்ள நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது. அத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை" என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story