'கள்ள கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர களத்திற்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ள கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர எடப்பாடி பழனிசாமி களத்திற்கு வந்திருக்கிறார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை,
கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பரப்புரையாற்றினர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
"10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழ்நாட்டிற்கு செய்த சிறப்பு திட்டங்கள் எதையும் சொல்ல முடியாமல் இருக்கும் பிரதமர் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் சீரழித்த எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
எதிர்வரும் தேர்தல் இந்தியாவை யார் ஆள வேண்டும்? என்பதை முடிவு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல். 'இந்தியா' கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல், யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்று தெரியாமல், எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ள கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர களத்திற்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சொன்னார். பா.ஜ.க.வை ஏன் எதிர்த்து பேசவில்லை? என்று நாம் கேட்டால், பா.ஜ.க.வை எதிர்த்து பேசாதது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார். இப்படிப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசுவது என்பது வீணானது."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.