மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x

Image Courtesy : PTI

மணிப்பூரில் நாளை 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை, அங்குள்ள உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா மனு அளித்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் வரும் 22-ந்தேதி(நாளை) 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story