கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள மாற்றத்திற்கான அடையாளம் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல்காந்தி பங்கேற்றார்.
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் இன்று தீவிர பிரசாரம் செய்தார். கேரளாவில் இருந்து இன்று மாலை திருநெல்வேலி வந்த ராகுல்காந்தி அங்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர், அவர் கோவை வந்தார். கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல்காந்தி பங்கேற்றார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா? .தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா? .கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்? .தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம்! வெறும் வெளிவேடம்.
மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களியுங்கள் . என தெரிவித்துள்ளார்.