கழுதைப்புலிகளிடம் இருந்து துணிச்சலாக கணவரின் உயிரை காப்பாற்றிய மனைவி


கழுதைப்புலிகளிடம் இருந்து துணிச்சலாக கணவரின் உயிரை காப்பாற்றிய மனைவி
x
தினத்தந்தி 6 Feb 2024 3:58 PM GMT (Updated: 6 Feb 2024 4:00 PM GMT)

கணவரை பிடித்து இழுக்க முயற்சித்து உள்ளார். ஆனால், கழுதைப்புலிகள் அவரை விடாமல் தாக்கி கொண்டிருந்தன.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் கொண்டகாவன் மாவட்டத்தில் வசித்து வருபவர் நந்து யாதவ். இவர், தன்னுடைய வயல்வெளியில் நீர் பாய்ச்சுவதற்காக நேற்று காலை 5 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியே கழுதைப்புலிகள் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அவை நந்துவை பார்த்ததும், அவரை இரையாக்கி கொள்வதற்காக அவர் மீது பாய்ந்துள்ளன. இதனால், நந்து அச்சத்தில் அலறியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டதும், நந்துவின் மனைவி சுக்னி ஓடி வந்துள்ளார். அவர், கணவரை பிடித்து இழுக்க முயற்சித்து உள்ளார். ஆனால், கழுதைப்புலிகள் அவரை விடாமல் தாக்கி கொண்டிருந்தன.

அப்போது, பெரிய தடி ஒன்று வயலில் கிடந்துள்ளது. அதனை எடுத்து கழுதைப்புலிகளில் ஒன்றின் மீது தாக்கி இருக்கிறார். அது உயிரிழக்கும் வரை தலையில் தாக்கி உள்ளார். கழுதைப்புலிகளின் கடுமையான தாக்குதலில் நந்துவின் கைகள், கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், உயிரிழந்த கழுதைப்புலிக்கு பிரேத பரிசோதனை செய்த பின்னர், வன துறை அதிகாரிகள் அதனை அடக்கம் செய்தனர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னரே, நந்து மற்றும் சுக்னி இருவரும் பெற்றோர் ஆகியிருக்கிறார்கள். நந்து அபாய கட்டத்தில் இருந்து தப்பி விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த துணிச்சலுக்காக, நந்துவின் மனைவியை கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.


Next Story