சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னை,
பழம்பெரும் சினிமா கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
கலைஞானத்துக்கு பாரதிராஜா விழா எடுத்து உள்ளார். என்னை தலைவரே என்று தான் பாரதிராஜா எப்போதும் அழைப்பார். அவருக்கும், எனக்கும் ஆழமான நட்பு உண்டு. கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை தாண்டி எங்களுக்குள் நட்பு உள்ளது. பணம், புகழ் சம்பாதிக்கலாம். பழைய நண்பர்களை சம்பாதிக்க முடியாது.
என்னை கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். எனக்கு கதாநாயகனாகும் எண்ணம் இருந்தது இல்லை. வில்லனாக தான் நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பைரவி என்ற படத்தலைப்புக்காகவே அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததுடன், படமும் வெற்றி பெற்றது.
சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் புராண சரித்திர கதைகளை படமாக்கியதால் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது. சினிமா படங்களில் டைரக்டர், தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக கதாசிரியர் பெயரை இடம் பெற வைக்க வேண்டும்.
மலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும். கலைஞானம் வாடகை வீட்டில் குடியிருப்பதாக சொன்னார்கள். அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவண செய்வதாக அமைச்சர் இங்கே பேசினார். நான் அந்த வாய்ப்பை அரசுக்கு கொடுக்க மாட்டேன். கடைசி மூச்சு வரை என் வீட்டில் தான் அவர் வாழ வேண்டும். கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாக பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர், பக்யராஜ், அமீர், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், நடிகை கே.ஆர்.விஜயா, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story