பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தம்; வீட்டில் இசையமைத்த இளையராஜா


பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தம்; வீட்டில் இசையமைத்த இளையராஜா
x
தினத்தந்தி 7 Jan 2020 11:07 PM GMT (Updated: 7 Jan 2020 11:07 PM GMT)

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசை பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை மாற்றினார்.

அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வற்புறுத்தியது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதிராஜா தலைமையில் டைரக்டர்கள் பலர் பிரசாத் ஸ்டூடியோவில் முற்றுகையிட்டனர்.

ரிக்கார்டிங் ஸ்டூடியோவை காலி செய்ய இளையராஜாவுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். உதவி இயக்குனர்கள் ஸ்டூடியோ முன்னால் திரண்டு இளையராஜாவை வெளியேற்றாதே என்று கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இளையராஜா புதிதாக இசையமைக்கும் தமிழரசன் படத்துக்கான இசைகோர்ப்பு பணியை தனது வீட்டிலேயே நடத்தி உள்ளார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் அவர் ஒரு படத்துக்கான பின்னணி இசைகோர்ப்பு பணிகளை தனது வீட்டில் மேற்கொண்டது இதுதான் முதல் முறையாகும்.

20-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை தனது வீட்டுக்கு அழைத்து பின்னணி இசைகோர்ப்பு பணியை முடித்துள்ளார். தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர்.

Next Story