ஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு.. சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது "புஷ்பா-2"


ஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு.. சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது புஷ்பா-2
x
தினத்தந்தி 11 Sep 2023 11:13 AM GMT (Updated: 11 Sep 2023 11:48 AM GMT)

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா 2' படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா: தி ரைஸ்'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா: தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றன.

முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படம், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று அறிவித்துள்ளது.

பான் இந்தியா திரைப்படமான புஷ்பா-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. திரைக்கதை உருவாக்கத்தில் முதலில் தாமதமானதாகவும், அதன்பின்னர் லொகேஷன்கள் கிடைக்காததால் தாமதம் ஆனதாகவும் தகவல் வெளியானது. தற்போது ஒரு வழியாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story