‘இனவாதம் நோக்கி அமெரிக்க திரைச்சமூகம் மெல்ல சரிகிறது’ -வில் ஸ்மித்


‘இனவாதம் நோக்கி அமெரிக்க திரைச்சமூகம் மெல்ல சரிகிறது’ -வில் ஸ்மித்
x
தினத்தந்தி 24 Jun 2017 9:27 AM GMT (Updated: 24 Jun 2017 9:27 AM GMT)

ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் நாயகனான வில் ஸ்மித், அடிக்கடி உண்மைகளை பேசி சர்ச்சையை கிளப்பி விடுபவர். அந்தவகையில் சமீபத்தில் இனவாதம் பற்றி ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் நாயகனான வில் ஸ்மித், அடிக்கடி உண்மைகளை பேசி சர்ச்சையை கிளப்பி விடுபவர். அந்தவகையில் சமீபத்தில் இனவாதம் பற்றி ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். சமீபகாலமாக கருப்பின நடிகர்களின் படங்கள், ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதுபற்றி வில் ஸ்மித் கூறியதை பார்ப்போம்....

“என் மனைவி மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் தவறு நடப்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றினால் அது சரியான முடிவே. அவரைப் போன்ற பெண்மணியை மனைவியாக அடைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். என் இனத்தவர் மத்தியில் எங்களுக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னமும்கூட சில பிரச்சினைகள் எழுகின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்கள் கடமை. அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் பிரச்சினை உருவாக நாங்களும் ஒரு காரணம் என்றே அர்த்தம். என் மனைவியின் வார்த்தைகள் இனப்பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பு. இது அவருக்கான, எங்கள் குடும்பத்துக்கான குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்திற்கான குரல்.

அமெரிக்காவின் பெருமிதமே அதன் பன்முகத்தன்மைதான். அந்த பன்முகத்தன்மை திரைத்துறையிலும் எதிரொலிக்க வேண்டும். ஆனால், ஹாலிவுட்டில் தவறு நடக்கிறது. ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு திறமை இருக்கிறது. அழகியல் பொதிந்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப்பட்டியல் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தெரிவுப்பட்டியல் ஆஸ்கர் அகாடமியை பிரதிபலிக்கிறது. ஆஸ்கர் அகாடமியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஹாலிவுட்டின் இந்த சார்பு பார்வை சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பார்வையாக கருதப்படும். பிரிவினைவாதம், இனவாதம், மத பேதம் நோக்கி அமெரிக்க திரைச் சமூகம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஹாலிவுட்டில் இது தொடர நான் விரும்பவில்லை” என்று உருக்கமாக பேசியிருக்கிறார். 

Next Story