மீண்டும் தயாரிப்பு பணியில் பிரபல நிறுவனம்


மீண்டும் தயாரிப்பு பணியில் பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:03 AM GMT (Updated: 21 Sep 2019 11:03 AM GMT)

மலையாள சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குனருமான பி.சுப்பிரமணியத்தால் உருவாக்கப்பட்டது ‘மேரிலேண்ட் ஸ்டூடியோ’ நிறுவனம். 1951-ல் நிறுவப்பட்ட இந்த ஸ்டூடியோவில் ஏராளமான திரைப்படங்கள் உருவாகி உள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் மூலமாக 60-க்கும் மேற்பட்ட சினிமாக்களை சுப்பிரமணியம் தயாரித்திருக்கிறார்.

1978 வரை படத்தயாரிப்பில் ஈடுபட்ட இந்த நிறுவனம், 1979-ல் சுப்பிரமணியம் இறந்ததற்கு பிறகு எந்த தயாரிப்பு பணியையும் செய்யாமல் இருந்தது. பின்னர் 2004-ம் ஆண்டு வாக்கில் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டது. 

இதற்கிடையில் மறைந்த பி.சுப்பிரமணியத்தின் பேரனான வைசாக் சுப்பிரமணியத்திற்கு, மீண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அப்போதுதான் ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ என்ற படத்தின் கதையை, அவரிடம் இயக்குனர் தயன் சீனிவாசன் கூறியிருக்கிறார். 

படத்தின் கதை பிடித்திருந்ததால் படத்தை தயாரிக்க வைசாக் சுப்பிரமணியம் முடிவு செய்தார். நிவின்பாலி, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூலை படைத்திருக்கிறது. இதன் மூலமாக படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்த மேரிலேண்ட் நிறுவனம் புத்துயிர் பெற்றிருக்கிறதாம். மீண்டும் தொடர்ந்து படங்களை இயக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Next Story