‘போர்க்களத்தின் தேவதை’ கிளாரா பர்டன்
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காயப்பட்டிருந்த வீரர்களுக்கு ஆறுதல் அளித்தார். போர்வீரர்களும், ராணுவத்தினரும் கிளாராவை ‘போர்க்களத்தின் தேவதை' என்றும், ‘அமெரிக்காவின் பிளாரென்ஸ் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கத் தொடங்கினர்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போரில் காயம்பட்ட வீரர்களுக்கும் உதவும் ‘பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதன் அமெரிக்கக் கிளையை நிறுவியவர் கிளாரா பர்டன் எனும் பெண்மணி.
கிளாரா, பள்ளியில் முறையான கல்வி பயிலவில்லை என்றாலும், திறமையானவராக இருந்தார்.
1850-ம் ஆண்டில் அவர் வசித்து வந்த நியூ ஜெர்ஸி மாகாணத்தின் போர்டன்டவுன் என்ற ஊரில், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். அவரின் தன்னலமற்ற சேவையால், அந்த ஊர் மக்களுக்கு கல்வியின் மீதும், பள்ளியின் மீதும் மதிப்பு ஏற்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் ஊர் மக்கள் இணைந்து பள்ளிக்குப் புதிதாக பெரிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம், ஒரு பெண்ணால் பெரிய நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது என்றது. எனவே மிகுந்த மனவேதனையோடு பள்ளிப் பணியை விட்டு விலகினார் கிளாரா.
1855-ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் இயங்கிவந்த அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில், பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாரா. ஒன்றிய அரசின் நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையுடன் ஆண் பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தைப் பெற்றார். ஆனால், பெண்கள் பணியாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்தது. கிளாரா பதவி இறக்கம் செய்யப்பட்டு, ஒரு கட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான், மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
கிளாரா சிறு வயது முதலே மருத்துவ சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1861-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. போரில் காயம்பட்ட வீரர்கள் வாஷிங்டன் நகருக்கு வரும் செய்தியை அறிந்தார். ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்ற கிளாரா, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனிருந்து செய்தார்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காயப்பட்டிருந்த வீரர்களுக்கு ஆறுதல் அளித்தார். போர்வீரர்களும், ராணுவத்தினரும் கிளாராவை ‘போர்க்களத்தின் தேவதை' என்றும், ‘அமெரிக்காவின் பிளாரென்ஸ் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கத் தொடங்கினர்.
பின்பு லிங்கன் அனுமதியுடன், காணாமல் போன வீரர்களுக்கான அலுவலகம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் தங்களின் குடும்பத்தினரோடு இணைவதற்கு உதவினார்.
பிரான்ஸ்-ஜெர்மனி நாடுகளுக்கு நடுவே நடைபெற்ற போரின்போது, பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்த செஞ்சிலுவையின் பன்னாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்றினார் கிளாரா.
இறுதியில் 1881-ம் ஆண்டு, மே மாதத்தில் அமெரிக்க செஞ்சிலுவை இயக்கத்தை நிறுவினார். அதன் தலைவராக 23 வருடங்கள் பணியாற்றிய கிளாரா, 1904-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1912-ம் ஆண்டு மறைந்தார்.
Related Tags :
Next Story