ஆரியன் கானுக்கு 4 வருட போதை பழக்கம், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா...?


image courtesy: PTI
x
image courtesy: PTI
தினத்தந்தி 4 Oct 2021 11:49 AM GMT (Updated: 4 Oct 2021 11:49 AM GMT)

அக்டோபர் 11 வரை ஆர்யன் கானின் காவலை சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறி உள்ளனர்.

மும்பை:

மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நேற்று முன்தினம் இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் நடந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக ஈடுபட்டு 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர் ஆவார்.  கைது செய்யப்பட்ட 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றினார்கள்.

ஆர்யன் கான் தவிர, கைது செய்யப்பட்ட மற்றவர்கள் முன்முன் தமேச்சா, அர்பாஸ் , இஸ்மீத் சிங், மோஹக் ஜஸ்வால், கோமித் சோப்ரா, நுபுர் சரிகா மற்றும் விக்ராந்த் சோகர். ஆர்யான் கானும் அர்பாஸும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நண்பர்கள்.

மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சட்டப்பிரிவுகள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்டோபர் 11ந்தேதி வரை  ஷாருக்கானின் மகன் ஆரியன் கானை காவலில் வைக்க போதை பொருள் தடுப்பு பிரிவு கோரியுள்ளது.

 ஆர்யனின் அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அவரது செல்போனையும் அதிகாரிகள் வாங்கி ஆய்வு செய்தனர். யார்-யாரிடம் அவர் பேசி இருக்கிறார் என்ற தகவல்களையும் சேகரித்தனர். வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலை சுட்டிக்காட்டி,  அவரது தொலைபேசியில் அதிர்ச்சியூட்டும்  பல தகவல்களை கண்டறிந்ததாகவும், போதைப்பொருள் விநியோகிக்க மொத்தமாக கொள்முதல் செய்வது குறித்தும் அதில் பேசப்பட்டு உள்ளது என   போதை பொருள் தடுப்பு பிரிவு கூறி உள்ளது.

நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மீது போதை பொருளை உட்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து ஆர்யன் போதை பொருள் வைத்திருக்கவில்லை என்று அவரது வக்கீல் கூறி உள்ளார்.

ஆர்யனை ஜாமினில் விட வேண்டும் என்று இன்று வக்கீல்கள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணை முடிந்த பின்னர்தான் ஆர்யனுக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

ஆரியன்கான் வாட்ஸ்அப் தகவல் மூலம் அவரது தோழிகளுக்கும் வலைவிரிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக கைதான 2 பெண்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் நாப்கினுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தனர். இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நான்கு ஆண்டுகளாக போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இங்கிலாந்து மற்றும் துபாயில் இருந்த போதும் போதை மருந்து உட்கொண்டு உள்ளார்.

போதை பொருள் தடுப்பு பிரிவினர்( என்சிபி) கைது செய்து  விசாரணையின் போது ஆரியன் கான் அழுததாக என்சிபி அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story