இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : நியூசிலாந்து அணி வெற்றி, தொடரையும் வென்றது


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : நியூசிலாந்து அணி வெற்றி, தொடரையும் வென்றது
x
தினத்தந்தி 2 March 2020 2:47 AM GMT (Updated: 2 March 2020 11:43 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை முழுமையாக இழந்தது.


கிறைஸ்ட்சர்ச்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 242 ரன்னும், நியூசிலாந்து அணி 235 ரன்னும் எடுத்தன.

இதனை அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். 2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 36 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 90 ரன்களுடன் திணறி கொண்டு இருந்தது. ஹனுமா விஹாரி 5 ரன்னுடனும், ரிஷாப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சை சந்திப்பதில் இந்திய அணியினரின் தடுமாற்றம் நீடித்தது. தொடர்ந்து ஆடிய ஹனுமா விஹாரி (9 ரன்கள்) டிம் சவுதி பந்து வீச்சிலும், ரிஷாப் பண்ட் (4 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சிலும் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். அடுத்து களம் கண்ட முகமது ஷமி (5 ரன்) டிம் சவுதி பந்து வீச்சில் டாம் பிளன்டெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஜஸ்பிரித் பும்ரா (4 ரன்) ரன்-அவுட் ஆனார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 124 ரன்னில் சுருண்டது. ரவீந்திர ஜடேஜா 16 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 10 ஓவர்களில் 34 ரன்களுக்குள் இந்தியாவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளும் சரிந்தன. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், டிம் சவுதி 3 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டாம் பிளன்டெல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நேர்த்தியாக விளையாடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 103 ரன்னாக உயர்ந்த போது டாம் லாதம் (52 ரன்கள்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் (5 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் டாம் பிளன்டெல் (55 ரன்கள்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் தலா 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் ஆட்டநாயகன் விருதும், மற்றொரு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி (மொத்தம் 14 விக்கெட்டுகள்) தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று இருந்த இந்திய அணி அடுத்து நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் முழுமையாக (ஒயிட்வாஷ்) தொடரை இழந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ‘ஒயிட்வாஷ்’ ஆகி உள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இந்திய அணி 9 ஆட்டத்தில் விளையாடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 360 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் மொத்தம் 180 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இங்கிலாந்து அணி 146 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 140 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை அணி 80 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி 24 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேச அணிகள் வெற்றி புள்ளி கணக்கை தொடங்கவில்லை.

Next Story