இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஒருவரது பெயரின் 2 ஆம் பாதியில் இன்னொருவர் பெயர்...வைரலாகும் புகைப்படம்


இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஒருவரது பெயரின் 2 ஆம் பாதியில் இன்னொருவர் பெயர்...வைரலாகும் புகைப்படம்
x

ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

மும்பை ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று 20 ஓவர் போட்டி , 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில்20 ஓவர்  தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்த இன்னிங்சில் இந்திய அணி 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் கோலி  டிக்ளேர் செய்தார்.
நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.அந்த அணி வீரர்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே  நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம், இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில், போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் , ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரசின் ரவீந்திரா , அஜாஸ் படேல் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது. 

ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை அஷ்வின் எடுக்க பிசிசிஐ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Next Story