ஐ.பி.எல் 2022: மும்பை அணியின் பயிற்சி முகாம் தொடக்கம்


ஐ.பி.எல் 2022: மும்பை அணியின் பயிற்சி முகாம் தொடக்கம்
x
தினத்தந்தி 15 March 2022 9:40 PM GMT (Updated: 15 March 2022 9:40 PM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் நவிமும்பையில் நேற்று தொடங்கியது


மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் நவிமும்பையில் நேற்று தொடங்கியது. தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே, கிரிக்கெட் இயக்குனர் ஜாகீர்கான் பயிற்சி பணியை கவனிக்கிறார்கள்.

 இதையொட்டி கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா உள்ளிட்டோர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர். வீரர்கள் 12 நாட்கள் தங்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள். அப்போது தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட உள்ளனர்.

மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் அவர் வருகிற 27-ந்தேதி நடக்கும் மும்பை அணிக்கான தொடக்க ஆட்டத்தில் (டெல்லிக்கு எதிராக) விளையாடமாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஐ.பி.எல். போட்டியின் போது மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) பரிந்துரைத்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு அணி இன்னிங்சில் இரண்டு முறை டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். பந்தை பளபளப்பாக்க எச்சிலால் தேய்க்க நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. மேலும், களத்தில் எதிர்முனை பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு நகரும் போது பவுலர் ரன்-அவுட் செய்தால் அதை ‘மன்கட்’ வகை அவுட் சர்ச்சைக்கு பதிலாக இனி அதிகாரபூர்வ ரன்-அவுட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Next Story