ஐ.பி.எல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமனம்


ஐ.பி.எல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமனம்
x
தினத்தந்தி 15 March 2022 10:26 PM GMT (Updated: 15 March 2022 10:26 PM GMT)

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.


மும்பை, 

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்சை 27-ந்தேதி எதிர்கொள்கிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) உள்ளார். உதவி பயிற்சியாளர்களாக பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

40 வயதான வாட்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள், 58 இருபது ஓவர் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் 2008-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய அவர் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அங்கம் வகித்தார். 

அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கால்பதித்த அவர் அந்த அணி 2018-ம் ஆண்டு கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றினார். 

2020-ம் ஆண்டில் எல்லா வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் முதல்முறையாக பயிற்சியாளராக பணியாற்ற இருக்கும் வாட்சன் கூறுகையில், ‘உலகின் சிறந்த 20 ஓவர் போட்டியான ஐ.பி.எல்.லில் எனக்கு ஒரு வீரராக நம்பமுடியாத நினைவுகள் இருக்கின்றன. 

தற்போது பாண்டிங்கின் தலைமையின் கீழ் பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அற்புதமான கேப்டனாக விளங்கிய அவர் தற்போது உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ளார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதனை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

Next Story