பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?


image credit: ndtv.com
x
image credit: ndtv.com
தினத்தந்தி 26 March 2022 11:17 AM GMT (Updated: 26 March 2022 11:17 AM GMT)

அரையிறுதிக்கு தகுதி பெற இரு இடங்களே எஞ்சியுள்ள நிலையில், இந்தியா உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

வெலிங்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும்.

எனினும், இந்தியா நாளை தன் கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ள நிலையில், இந்தியாவால் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க முடியுமா என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால், 8 புள்ளிகளுடன், வெஸ்ட் இண்டீசை(7 புள்ளிகள்) முந்தி ரன்ரேட்டின் அடிப்படையில் புள்ளிப்பட்டியிலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை பிடிப்பதன் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும்.

ஒருவேளை இந்தியா தோற்றால்...! அதற்கு பின்னரும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா மோசமாக தோற்கக்கூடாது. 

முன்னதாக நாளை நடைபெறும் இங்கிலாந்து- வங்காளதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி வங்காளதேசத்திடம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவேண்டும். அவ்வாறு நிகழும் பட்சத்தில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன்ரேட்டின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெறும். 


Next Story