வாணவேடிக்கை காட்டிய கம்மின்ஸ் : 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 6 April 2022 5:38 PM GMT (Updated: 6 April 2022 5:38 PM GMT)

மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். 12 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாம் பில்லிங்ஸ்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இஷான் கிஷன் உடன் மும்பை அணியின் அறிமுக போட்டியில் விளையாடும் டெவால்ட் பிரிவிஸ் ஜோடி சேர்ந்தார். சரிவில் இருந்து அணியை மீட்கும் இவர்களது முயற்சி வெகு நேரம் நிலைக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த மும்பை அணியில் டெவால்ட் பிரிவிஸ் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் இந்த சீசனின் முதல் போட்டியில் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இந்த ஜோடியை கம்மின்ஸ் பிரித்தார். இஷான் கிஷன் 14 ரன்களில் வெளியேற  மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து திணறியது.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சிக்சர் பவுண்டரிகளாக விளாசினர். 50 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய பொல்லார்ட் வந்த வேகத்தில் சிக்சர்களாக விளாசினார். அவர் 5 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஹானே களமிறங்கினர். ரஹானே 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மில்ஸ் பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். வெங்கடேஷ் ஐயர் உடன் சிறிது நேரம் கைகோர்த்த அவர் 17 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த நிதிஷ் ராணா 8 ரன்களிலும் ரசல் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் கம்மின்ஸ் களமிறங்கினார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

அவருடன் இணைந்து கம்மின்ஸ் தனது பங்கிற்கு சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்தார். மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா 3-வது வெற்றியை பெற்றது.

Next Story