ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி..?


ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி..?
x
தினத்தந்தி 12 April 2022 1:21 AM GMT (Updated: 12 April 2022 1:21 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்க உள்ளது.

மும்பை, 

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் முறையே கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை கண்டு தத்தளித்து வருகிறது. கடைசியாக நடந்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. 

சென்னை அணி நிர்ணயித்த 155 ரன் இலக்கை ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. முந்தைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சென்னை அணியில் மொயீன் அலி (48 ரன்கள்) தவிர யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கும் மெச்சும்படி அமையவில்லை. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 

முந்தைய 3 ஆட்டங்களில் 0, 1, 1 ரன்களில் நடையை கட்டிய அவர் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். அத்துடன் மற்ற வீரர்களும் பதற்றமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியமானதாகும். வெற்றிக்கணக்கை தொடங்காத சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. 

இருப்பினும் சென்னை அணி தனது முந்தைய தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான வியூகங்களுடன் களம் இறங்கும். சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி நேற்று கூறுகையில், ‘புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவை அணியில் உள்ள அனைவரும் உயர்வாக மதிப்பதுடன் நல்ல ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர் தனது பணியை நன்றாகவே செய்து வருகிறார். நாங்கள் சில வெற்றிகளை பெற்றால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் நெருக்கடியின்றி செயல்பட முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் விரைவில் வெற்றிகளை பெறுவோம்’ என்றார்.

பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பணிந்தது. அதன் பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. அந்த அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை வீழ்த்தியது. 151 ரன்னில் மும்பையை கட்டுப்படுத்திய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. 

பெங்களூரு அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் (66 ரன்கள்), விராட்கோலி (48 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். தினேஷ் கார்த்திக், முதல் ஆட்டத்தில் ஆடிய மேக்ஸ்வெல் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேலின்(6 விக்கெட்) சகோதரி மரணம் அடைந்ததால் அவர் அணியின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு (பயோ பபுள்) வளையத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். 

இதனால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இது பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. வலுவான நிலையில் இருக்கும் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை தன்வசப்படுத்த முடியும். வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.


Next Story