இங்கிலாந்து வர்ணனையாளரிடம் கோகினூர் வைரம் குறித்து கேட்ட சுனில் கவாஸ்கர்- வைரல் வீடியோ


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 April 2022 9:52 AM GMT (Updated: 12 April 2022 9:52 AM GMT)

கோகினூர் வைரம் குறித்து இங்கிலாந்து வர்ணனையாளரிடம் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

மும்பை,

உலகின் மிக உயர்ந்த மதிப்புமிக்க வைர ஆபரணமாக கருதப்படுவது கோகினூர் வைரம். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக இந்த வைரம் கைப்பற்றப்பட்டது. 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டோரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.

இந்தியாவிற்கு சொந்தமாக இருந்தாலும் அப்போது இருந்து தற்போது வரை இது இங்கிலாந்து நாட்டின் அரச ஆபாரங்களின் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில்  நடந்த ஐபிஎல் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர்,  கோகினூர் வைரம் குறித்து இங்கிலாந்து வர்ணனையாளர் இடம் கேட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் பிரபல ஆங்கில தொலைக்காட்சி வர்ணனையாளராக இந்தியாவின் சுனில் கவாஸ்கர் மற்றும் இங்கிலாந்தின் ஆலன் வில்கின்ஸ் பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது விளையாட்டின் இடைவேளையின் போது, ஒளிபரப்பாளர் மரைன் டிரைவ் சாலையின் வான்வழி காட்சிகளைக் காட்டத் தொடங்கினார், இது "குயின்ஸ் நெக்லஸ்" என்று அழைக்கப்படுகிறது. ஒளிபரப்பில் இதை கவனித்த  கவாஸ்கர், "நாங்கள் இன்னும் கோகினூர் வைரத்திற்காக காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். 

இதை கேட்ட ஆலன் வில்கின்ஸ் சிரிக்க தொடங்கினார். கவாஸ்கரும் புன்னகை செய்தார். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு சொந்தமான உலகின் மிக உயர்ந்த வைரம் தற்போது வரை இங்கிலாந்து நாட்டில் இருப்பது சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக பேசுபொருளாகியுள்ளது.

Next Story