நோ பால் சர்ச்சை: ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம்


நோ பால் சர்ச்சை:  ரிஷப் பண்டுக்கு  100 சதவீதம் அபராதம்
x
தினத்தந்தி 23 April 2022 7:29 AM GMT (Updated: 23 April 2022 7:30 AM GMT)

உதவிப் பயிற்சியாளரான பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதத்துடன், ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. 

டெல்லி அணி வெற்றிக்காக போராடிவந்த நிலையில், கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஒபட் மெக்காய் போட வந்த நிலையில், ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினால் மட்டுமே டெல்லி அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. 

கடைசி ஓவரை ரோவ்மேன் பவல் எதிகொண்டார். அவர் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இதனால் டெல்லி அணியினர் உற்சாகமடைந்தனர். அப்போது 3 ஆவது பந்தில் நோ பால் சர்ச்சையும் எழுந்தது. 

ஆனால், நடுவர்கள் இதனை நோ பால் கொடுக்க மறுத்தனர். இதனால், மைதானத்திற்கு வெளியே அமர்ந்திருந்த டெல்லி அணியினர் மிகவும் சீற்றத்துடன் கானப்பட்டனர். ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்ட சிலர், மூன்றாம் நடுவர் இதில் தலையிட வேண்டும் என்றும் சைகையின் மூலம் தெரிவித்தனர். ஆனால், நடுவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.

இடையே ஷேன் வாட்சன் ரிஷப் பண்டிடம் ஏதோ கூற, கோபத்தின் உச்சிக்கு சென்ற ரிஷப், பேட்ஸ்மேன்களை வெளியே வருமாறு சைகை காட்டினார். இதனால், போட்டியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும், உதவிப் பயிற்சியாளரான பிரவின் ஆம்ரே, ஒரு படி மேலே சென்று மைதானத்திற்குள்ளேயே நுழைந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நடுவர்கள் அவரை சமாதானப்படுத்தி மைதானத்திற்கு வெளியே அனுப்பினர்.

நடுவர்கள் பேட்ஸ்மேன்களை சமாதானப்படுத்திய பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அடுத்த 3 பந்துகளை எதிர்கொண்ட ரோவ்மேன் பவல், இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து நோ பால் சர்ச்சையால், ஆட்டத்தை நிறுத்தமுயன்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐபிஎல் விதிமுறை மீறலுக்காக போட்டிக்கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஷர்தூல் தாக்கூருக்கு போட்டிக்க்கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 


களத்திற்கே வந்து நடுவரிடம் வாதாடிய டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளரான பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதத்துடன், ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story