ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? - இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? - இன்று மோதல்
x
தினத்தந்தி 27 April 2022 12:26 AM GMT (Updated: 27 April 2022 12:26 AM GMT)

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி பெற்று கம்பீரமாக உள்ளது.

மும்பை,

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஐதராபாத் அணியிடம்) என்று 12 புள்ளிகள் பெற்று கம்பீரமாக உள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 அரைசதம் உள்பட 295 ரன்கள்), டேவிட் மில்லர், சுப்மான் கில், அபினவ் மனோகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (10 விக்கெட்), லோக்கி பெர்குசன், ரஷித் கான், யாஷ் தயாள் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் குஜராத் அணி எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாரமாக செயல்பட்டு வருகிறது.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (சென்னை, குஜராத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 2 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து சொதப்பிய ஐதராபாத் அணி அதன் பிறகு பெரும் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து வியக்க வைத்துள்ளது. 

முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 68 ரன்களில் பெங்களூருவை சுருட்டியதுடன் 9 விக்கெட்
வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு அமர்க்களப்படுத்தியது. ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (220 ரன்கள்) ராகுல் திரிபாதி, மார்க்ராம் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரன் ஆகியோரும் நல்ல பங்களித்தால் அந்த அணி மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டி.நடராஜன் (15 விக்கெட்), உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி உற்சாகத்துடன் அந்த அணி களம் இறங்கும். ஏற்கனவே முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது. 

அதேநேரத்தில் அந்த அணிக்கு எதிரான ஆதிக்கத்தை தொடர ஐதராபாத் அணி மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story