தவறுகளை திருத்தி நல்வழி பெறுவோம்


தவறுகளை திருத்தி நல்வழி பெறுவோம்
x
தினத்தந்தி 4 May 2017 11:00 PM GMT (Updated: 4 May 2017 9:51 AM GMT)

உடலை கெடுக்கும் தீய பழக்கங்களை பட்டியலிட்டால், அதிக சோம்பல், தேவைக்கும் அதிக உணவு சாப்பிடுவது, தேவையற்ற படக்காட்சிகளில் ஆழ்ந்திருப்பது போன்றவை அவற்றில் சில.

னிதன் தன் னை நல் வழிப்படுத்திக்கொள்ள பல்வேறு சம்பவங்களை அவனுக்கு காட்சியாகவும், சாட்சியாகவும் இறைவன் வைக்கிறார். கெட்ட பழக்கங்களில் ஈடுபடுதல் மற்றும் இனிப்பு, கொழுப்பு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் போன்றவற்றால் நேரிடும் சுகவீனங்கள் பற்றி நோயாளி களைக் காட்டி மற்றவர்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுக்கிறார்.

தீய சேர்க்கை, தவறான உறவுகள், கள்ள வழியில் பொருள் சேர்த்தல், பகைத்தல் உட்பட பல கெட்ட சுபாவங்களால் என்னென்ன நேரிடும் என்பவை பற்றிய அறிவையும், பல்வேறு சம்பவங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் இறைவன் அருளுகிறார். இதுசம்பந்தமான உரையாடல்கள், படக்காட்சிகள், கட்டுரைகள் என எத்தனையோ வடிவத்தில் அவை அனைவரையுமே வந்தடைகின்றன.

ஆனால் அதுபற்றி எல்லாம் படித்தும், கேட்டும், கண்டும் நாம் உணர்வடைந்து இருக்கிறோமா என்பதுதான் நமக்குநாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. உணர்வடைந்தவர்கள் தீய பாதைகளை விட்டு விலகியிருப்பார்கள். நேரிடும் கேடு சம்பவங்களைப் பற்றிய அறிவு இருந்தும் திருந்தாதவர்கள், தீய பழக்க வழக்கங்களிலேயே தொடர்ந்து நீடித்திருப்பார்கள்.

ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே சரீர மற்றும் ஆத்ம ரீதியான தீய குணங்கள் உள்ளன. உடலை கெடுக்கும் தீய பழக்கங்களை பட்டியலிட்டால், அதிக சோம்பல், தேவைக்கும் அதிக உணவு சாப்பிடுவது, தேவையற்ற படக்காட்சிகளில் ஆழ்ந்திருப்பது போன்றவை அவற்றில் சில.

பெருமை, பொறாமை, இச்சையான சிந்தனை உள்ளிட்டவை ஆத்ம ரீதியான தீய குணங்களில் சில. இவை அனைத்திலும் இருந்து விலக முழுமனதோடு முயற்சிப்பவனே, ஆன்மிக உணர்வைப் பெற்றவனாகிறான்.

இப்படிப்பட்ட ஆன்மிக உணர்வைப் பெற்றவனுக்கே, அவன் எந்த மதம், சாதி, இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறைவனின் பாக்கியம் அல்லது அருள் கிடைக்கிறது. அதன் மூலம் அவன் தன்னை இறைவழியில் முற்றிலும் நல்ல மனிதனாக மாறிக்கொள்வதற்கான இறைஆவியின் பலத்தைப் பெறுகிறான்.

இப்படிப்பட்ட நிலையை எட்டியவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை எந்தவித பாவமும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்கிறான். பகைக்கிறவனை பகைப்பது, கண்ணைக் கவர்வதை எல்லாம் இச்சிப்பது, எதிரியின் அழிவை ரசிப்பது, மற்றவரின் வளர்ச்சியில் பொறாமை கொள்வது போன்றவை எல்லாம் இறைவனின் குணங்கள் அல்ல.

இப்படிப்பட்ட குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் இறைவழியில் இல்லாமல் பாவ உணர்வுடன் இருக்கிறோம் என்று அர்த்தம். இறைவனின் குணங்களை பெறாதவன் ஆன்மிகவாதியும் அல்ல, அவனுக்கு நற் குணங்களை அளிக்க முடியாதவர் இறைவனும் அல்ல என்பதும் உண்மை. ஒருவன் தன்னைத்தானே முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியாது. படைத்தவருக்கே படைப்பை மாற்றும் வல்லமை உண்டு.

இதுபற்றி இயேசு வெளிப்படுத்தியுள்ள ஆன்மிகக் கருத்து, ஆழமான உண்மையை வெளிக்காட்டுகிறது. ‘உங்கள் கண்கள் காண்கிறதாயும், காதுகள் கேட்கிறதாயும் இருப்பதால் அவை பாக்கியமுள்ளவை’ என்று தனது சீடர்களிடம் அவர் கூறினார்.

அதாவது, போதனையாக பல்வேறு சம்பவங்களைக் கண்டு, கேட்டு, அதன் மூலம் தங்களை திருத்திக்கொள்ளும் உணர்வோடு முன்வருபவர்களே பாக்கியவான்கள் என்று தெளிவுபடுத்தினார். அதோடு, அப்படிப்பட்டவர் களின் உள்ளத்தில் இறைஆவியின் போதனை அளிக்கப்படும் என்றும்; மற்றவர்கள் கேட்டும், கண்டிருந்தாலும், உணராமல் இருப்பதால் அவர்களுக்கு இறைவனின் நேரடி போதனை கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார் (மத்.13:1016).

அதுமட்டுமல்ல, 12–ம் வசனத்தில் மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு தீயகுணங்கள் மூலமாக விளையும் துயர சம்பவங்களைப் பற்றி கேட்டு, கண்டு, அறிந்திருந்தும், அதனால் பாவ உணர்வடைந்து இறைவழிப்படி தன்னை திருத்திக்கொள்ள முன்வராமல் தொடர்ந்து அதுபோன்ற தீயவழியில் நீடித்தால், ஒரு கட்டத்தில் அவனிடமிருந்த கொஞ்ச உணர்வும், நற் குணங்களும் நீங்கி, தீயவழியை முழுவதுமாக பின்பற்றக்கூடிய இதய கடினநிலை ஏற்பட்டுவிடும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.

அவனிடத்தில் இருந்து என்னவெல்லாம் எடுக்கப்படும் என்பதை இயேசு பட்டியலிடவில்லை. ஆனால் உலக அந்தஸ்துகளை அவன் அதிகம் பெற்றிருந்தாலும், ஆன்மிக நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்துமே அவனைவிட்டு எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையை எட்டியவன், இதய கடினத்தினால் தீமைகளையே செய்து, அதனால் விளையும் தீமையினால் அழிக்கப்படுவான் என்பது நிஜம்.

எனவே, நம்மிடம் உள்ள பாவ உணர்வுகளை நீக்கி இறை உணர்வை வளர்த்துக்கொள்வோம்.

Next Story