100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 5 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2017 11:15 PM GMT (Updated: 2 May 2017 8:17 PM GMT)

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை திட்டம்

ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதராங்களையும், நீர் வரத்து கால்வாய்கள் போன்றவற்றையும் சுத்தம் செய்து பராமரித்து வருகின்றனர்.

ஆனால் இந்த திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், மாதம் தோறும் முறையாக ஊதியம் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. சார்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முறையாக ஊதியம் வழங்கக் கோரியும், கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

இதில் தெற்கு மாவட்ட தி.மு.க.துணைச் செயலாளர் ராஜாஅருண்மொழி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், நகர செயலாளர் ராமமூர;த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கசாமி, துணைச் செயலாளர் பாலவிநாயகம், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட மாணவரணி வேல்முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.


Next Story