உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்–அப் எண்ணில் புகார் செய்யலாம்


உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்–அப் எண்ணில் புகார் செய்யலாம்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 6:48 PM GMT)

உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்–அப் எண்ணில் புகார் செய்யலாம் கலெக்டர் வீரராகவராவ் அறிவிப்பு

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் உணவு பொருட்களின் அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி தேதி ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 357 சில்லரை உணவுப்பொருட்கள் விற்பனைக் கடைகள் உள்ளன. உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள உணவு தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் அதன் விலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் பால், எண்ணெய், தண்ணீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப்பண்டங்களின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்வர்கள். அப்போது அவர்கள் உணவுப்பொருட்களின் மாதிரியை எடுத்து, அதன் தரம் குறித்து சோதனை கூடங்களுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்வார்கள். இதன் முடிவில் தரமில்லாத உணவுப்பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது அதிகபட்ச விலையை விட அதிகமாக இருந்தாலும், தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலும் 9444042322 என்ற வாட்ஸ்–அப் எண்ணில் புகார் செய்யலாம். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரின் இந்த ஆய்வின் போது, மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் லட்சுமிநாராயணன் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story