மழை வேண்டி வீடு வீடாக சென்று கஞ்சி வாங்கி நூதன வழிபாடு நடத்திய பெண்கள்


மழை வேண்டி வீடு வீடாக சென்று கஞ்சி வாங்கி நூதன வழிபாடு நடத்திய பெண்கள்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 8:09 PM GMT)

தாராபுரம் அருகே மழை பெய்ய வேண்டி பெண்கள் வீடுவீடாக சென்று கஞ்சி வாங்கி நூதன வழிபாடு நடத்தினர்.

அலங்கியம்,

தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வருடம் பருவ மழை பொய்த்து போனது. இதனால் அப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே அங்கு விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இப்பகுதி மக்கள் பல்வேறு விதமான யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தாராபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டியில் நேற்று முன்தினம் பொதுமக்கள் வீடுவீடாக சென்று கஞ்சி வாங்கி வழிபாடு நடத்தி அவற்றை குடித்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கஞ்சி வடித்து வைத்து இருந்தனர். பின்னர் அங்கு உள்ள பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் வீடுவீடாக சென்று கஞ்சியை ஒரு மண்பானையில் வாங்கினர். பின்னர் அந்த கஞ்சி அங்கு உள்ள விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பெண்கள் கஞ்சி கலசத்தை சுற்றி நின்று கும்மியடித்து மழை வேண்டி பாட்டு பாடி வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பானையில் இருந்த கஞ்சியை பெண்கள் மற்றும் குழந்தைகள் வாங்கி குடித்தனர். பின்னர் அவர்கள் ஆண்களிடம் கைகழுவுவதற்கு தண்ணீர் கேட்டனர். அவர்கள் எங்கள் ஊரில் மழை பெய்யாததால் கைகழுவுவதற்கு தண்ணீர் தர இயலாது என்று கூறினர்.

இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மழையில்லா ஊரில் எப்படி வாழ்வது என்று கூறி கோபித்துக்கொண்டு எச்சில் கைகளுடன் ஊருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் சென்று அமர்ந்துகொண்டனர். பின்னர் ஆண்கள் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பெண்கள் இருக்கும் இடத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு இருந்த பெண்களை சமாதானம் செய்து அவர்கள் மீது தாங்கள் குடத்தில் கொண்டு வந்த தண்ணீரை தெளித்து ஊருக்குள் மழை வந்து விட்டது என்று கூறி அழைத்தனர். அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளை கழுவிக்கொண்டு ஊருக்குள் வந்தனர். அப்போது அங்கு இருக்கும் ஆண்கள் அங்குள்ள கோவில் மற்றும் வீடுகளின் முன்பு தண்ணீர் தெளித்து அப்பெண்களிடம் மழை பெய்துள்ளதாக கூறினார்கள். பின்னர் அப்பெண்கள் மழை வேண்டி கும்மிபாட்டுகள் பாடினர். இவ்வாறு பெண்கள் நூதன வழிபாடை நடத்தினார்கள்.

மழை வரும் என நம்பிக்கை

இது குறித்து பஞ்சப்பட்டியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–

தாராபுரம் பகுதியில் கடந்த வருடம் பருவமழை பெய்யவில்லை. கோடை மழையும் போதுமான அளவில் இல்லை. எனவே எங்கள் பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கும், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

ஆழ்குழாய் கிணறுகளிலும் 1000 அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டது. எனவே எங்களின் முன்னோர் மழை வேண்டி சில வழிபாடுகளை நடத்துவது வழக்கம். அதன்படி நாங்களும் வீடுவீடாக சென்று கஞ்சி வாங்கி குடிக்கும் இந்த நூதன வழிபாடு நடத்தியுள்ளோம். முன்பு இந்த வழிபாடு நடைபெற்ற சில நாட்களில் பெரும் மழை பெய்துள்ளது. அதன்படி மழை வரும் என்பது ஐதீகம் என்று கூறினார்.


Related Tags :
Next Story