சேலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சேலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 9:33 PM GMT)

சேலம் வாய்க்கால் பட்டறையில் நேற்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் பல இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் கேட்டு பல இடங்களில் தினமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் குழாயில் சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரை பிடிக்க பல மணி நேரம் பொதுமக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலைமை இருந்து வருவதை காணமுடிகிறது.

இந்தநிலையில், சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இந்தநிலையில், குடிநீர் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வாய்க்கால்பட்டறை பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்–வலசையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வாய்க்கால்பட்டறை பகுதியில் 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், எனவே, உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சீரான முறையில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர், பொதுமக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.Next Story