தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்


தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 9:54 PM GMT (Updated: 3 May 2017 9:53 PM GMT)

நிரந்தர சாலை வசதி கோரி குப்பனூர் கிராம மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொம்மிடி,

பொம்மிடி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தில் பாரதிநகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று வர கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பட்டா வழங்கப்பட்டதால், பொதுமக்கள் பயன்படுத்திய வழிப்பாதை அடைக்கப்பட்டது.

பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் விவசாய தோட்டங்களுக்கு செல்ல வழிப்பாதை இல்லாமல் பாதிக்கப்பட்டனர். வழிப்பாதை கோரி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிலும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் குப்பனூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். அந்த அலுவலகத்திற்குள் அமர்ந்து நிரந்தர சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உதவி கலெக்டர்(பொறுப்பு) சகீலா, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் ஆகியோர் அங்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வருவாய்த்துறை மூலம் உடனடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story