40 நாய்கள் சுருண்டு விழுந்து இறந்த மர்மம் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?


40 நாய்கள் சுருண்டு விழுந்து இறந்த மர்மம் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?
x
தினத்தந்தி 21 Jun 2017 9:15 PM GMT (Updated: 21 Jun 2017 1:21 PM GMT)

கே.வி.குப்பம் அருகே 15 நாட்களுக்குள் 40 நாய்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்துள்ளன.

குடியாத்தம்,

கே.வி.குப்பம் அருகே 15 நாட்களுக்குள் 40 நாய்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்துள்ளன. அந்த நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால் அது குறித்து புளூகிராஸ் அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாய் திடீர் சாவு

குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் அருகே கருத்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்தம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் திடீரென இறந்துள்ளது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது கடந்த 15 நாட்களில் அப்பகுதியில் 40–க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் சுருண்டு விழுந்து இறந்தது தெரிய வந்தது. பலர் நாய் இறந்ததற்கான காரணம் தெரியாமல் அதனை புதைத்து விட்டனர்.

இது குறித்து கதிரவன், பள்ளிகொண்டாவில் உள்ள புளூகிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த அமைப்பை அமைப்பை சேர்ந்த சுகுமார் உள்ளிட்டோர் மற்றும் கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவர் சின்னமாரியப்பன் கருதம்பட்டு பகுதியில் இறந்து கிடந்த நாய்களின் உடல்களை பரிசோதனை நடத்தினர். மேலும் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கதிரவன் மற்றும் புளூகிராஸ் அமைப்பினர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

வி‌ஷம் தடவிய உணவுப்பொருள்

போலீசார் நடத்திய விசாரணையில் கருத்தம்பட்டு அருகே ஒருவர் வளர்த்து வரும் கோழிகளை சில நாய்கள் கடித்து கொன்று விட்டதாகவும், இதனையடுத்து அந்த நபர் வி‌ஷம் தடவிய உணவு பொருட்களை நாய்கள் சுற்றித்திரியும் பகுதியில் வீசி அவற்றை கொன்றிருக்கலாம் எனவும் அந்த பகுதி மக்கள் சிலர் கூறியுள்ளனர்.

நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான ஆய்வக அறிக்கை 2 நாட்களில் வந்தபின்னர் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story