அரசு அறிவித்தப்படி தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்


அரசு அறிவித்தப்படி தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 21 Jun 2017 5:43 PM GMT)

மணல்மேடு அருகே அரசு அறிவித்தப்படி தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல்மேடு,

கடந்த 2014–ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நாகை மாவட்டம் குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று 110 விதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால் தடுப்பணை கட்ட அதற்கான பணிகளை தற்போது வரை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைத்து மணல் எடுப்பதாலும், பருவமழை பொய்த்து போனதாலும் மணல்மேடு, முடிகண்டநல்லூர், வல்லம், கடலங்குடி, சீப்புலியூர், வக்காரமாரி, புரசங்காடு, பாப்பாகுடி, குறிச்சி, சித்தமல்லி, குமாரமங்கலம், கிழாய், இலுப்பப்பட்டு, அகரமணல்மேடு, ராதாநல்லூர், ஆத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும், கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 40–க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலையும், குடிநீருக்கு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

மனித சங்கிலி போராட்டம்

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்தப்படி மேற்கண்ட இடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி நேற்று விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் மணல்மேடு மற்றும் ஆதனூர் பகுதி விவசாயிகள் சுமார் 800–க்கும் மேற்பட்டோர் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம்–ஆதனூர் இடையே சுமார் 1 கி.மீட்டர் தூரம் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர். அப்போது அரசு அறிவித்தப்படி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உடனே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், தடுப்பணை கட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை வருகிற 28–ந் தேதிக்குள் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடாவிட்டால், 30–ந் தேதி நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story