இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை மாமனார், மாமியார் கைது


இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை மாமனார், மாமியார் கைது
x
தினத்தந்தி 21 Jun 2017 8:00 PM GMT (Updated: 21 Jun 2017 6:40 PM GMT)

இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

லாரி டிரைவர்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பெரியபிள்ளை வலசை புதுக்காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வக்குமார் (வயது 34) லாரி டிரைவர். இவர் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணியபுரம் தெருவை சேர்ந்த ரஞ்சிதா (29) என்ற பெண்ணுக்கும், செல்வக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சிதா ஏற்கனவே திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவருக்கு 9 வயதில் சேஷாத்ரி என்ற குழந்தை உள்ளது.

இந்த நிலையில் செல்வக்குமார் ரஞ்சிதாவை திருமணம் செய்வதாக கூறினார். அதன்படி கடந்த 30.11.2015 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 13 பவுன் தங்க நகைகள் ரஞ்சிதாவிற்கு போடப்பட்டன. சீர்வரிசையாக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

சித்ரவதை

திருமணத்துக்கு பின்னர் செல்வக்குமார் வேலைக்கு போகவில்லை. ரஞ்சிதாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ரஞ்சிதா பெயரில் இருந்த இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு நகைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு அவரை செல்வக்குமார் துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 21.12.2016 அன்று தென்காசி அனைத்து மகளிர் போலீசில் ரஞ்சிதா புகார் செய்தார். போலீஸ் நிலையத்தில் வாகனத்தை திருப்பிக் கொடுப்பதாக செல்வக்குமார் கூறியிருந்தார். ஆனால் அதை கொடுக்க வில்லை. இந்த நிலையில் கடந்த 5.5.2017 அன்று பெரியபிள்ளை வலசைக்கு ரஞ்சிதா சென்றுள்ளார். அப்போது செல்வக்குமார் அவரது தந்தை சுப்பிரமணியன், தாயார் குட்டியம்மாள், உறவினர் செல்வி ஆகியோர் ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து ரஞ்சிதா தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்– இன்ஸ்பெக்டர் செல்வி, சுப்பிரமணியன், குட்டியம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வக்குமார், செல்வியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


Next Story