ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:44 PM GMT)

ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோட்டில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு செல்கிறது. ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக செல்லும் இந்த ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 8 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையம் 3–வது நடைமேடை பகுதிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதைத்தொடர்ந்து பயணிகள் ஒவ்வொருவராக ரெயிலில் ஏறத்தொடங்கினார்கள்.

வெடிகுண்டு மிரட்டல்

இரவு 8.30 மணி அளவில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–7 பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்சு அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்ததும், அங்கிருந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.

ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார் படுத்தப்பட்டனர். மர்ம நபர் குறிப்பிட்டபடி வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்–7 பெட்டிக்கு சென்று முழுமையாக அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர். ஆனால் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் சிக்கவில்லை.

புரளி

அதைத்தொடர்ந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் ரெயில் என்ஜின் முதல், கடைசி பெட்டி வரை அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கொண்டு வந்த பொருட்களையும் சோதனையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக 9 மணிக்கு புறப்படவேண்டிய ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னரும் சந்தேகப்படும்படி எந்த ஒரு பொருளும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று முடிவு செய்தனர். பின்னர் 9.35 மணி அளவில் ரெயில் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து 35 நிமிடங்கள் தாமதத்துடன் சென்னை நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

தீவிர விசாரணை

எனினும் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் நேற்று இரவு முழுவதும் ரெயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியபோது, ‘வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசியது ஆண் குரலாக இருந்தது. எதற்காக இந்த புரளியை கிளப்பினார்? இதில் ஏதேனும் காரணங்கள் உள்ளதா? இந்த தொலைபேசி அலைப்பு எங்கிருந்து வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

இந்த சம்பவம் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story