தமிழகம், மராட்டிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் யோகா கற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்


தமிழகம், மராட்டிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் யோகா கற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:45 PM GMT (Updated: 21 Jun 2017 6:58 PM GMT)

‘தமிழகம், மராட்டிய மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் யோகா கற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

கோவை

கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசுகையில் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி ஆங்கில பேச்சை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈஷாவில் நிறுவப்பட்டுள்ள ஆதியோகி சிலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமான சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளையை பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சத்குரு யோகாவை பரப்பி வருகிறார் இதன் மூலம் அவர் இந்தியாவின் சிறந்த கலாசார தூதராக விளங்குகிறார். அவர் சிறந்த ஆன்மீக பேச்சாளர். அவரது எண்ணங்கள் உயர்ந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் எண்ணங்களில் சத்குரு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தியா சிறந்த கலாசாரத்துக்கு புகழ் பெற்றது. அடுத்த தலைமுறையை சிறப்பான நல்வழிப்படுத்தும் கருவியாக யோகா விளங்குகிறது. யோகாவின் மூலம் நாம் சகிப்புத் தன்மை, நல்லொழுக்கம் போன்ற நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிவதின் மூலம் முழுமையான மனிதராக நாம் உருவாக முடியும்.

மாணவர்களுக்கு யோகா

இன்றைய அவசர உலகில் வாழ்க்கை முறை, பணி போன்ற காரணங்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனஅழுத்தத்தினால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. அந்த இளைஞர்கள் யோகாவை கற்றுக் கொண்டால் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்க முடியும். போதைப்பழக்கம், மதுவுக்கு அடிமையானவர்கள் யோகா மூலம் அவற்றிலிருந்து விடுபட முடியும். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் ஈஷா அறக்கட்டளை மூலம் யோகா பயிற்றுவிக்கப்பட உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் யோகாவை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு நான் தான் கவர்னர். தமிழகத்தில் 20 பல்கலைக்கழகங்களும், மராட்டியத்தில் 20 பல்கலைக்கழகங்களும் உள்ளன. அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை மூலம் யோகா கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் திறமையான, ஒழுக்கமான இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story