பெங்களூருவில் பயங்கரம் திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் அடித்துக்கொலை


பெங்களூருவில் பயங்கரம் திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 21 Jun 2017 7:58 PM GMT (Updated: 21 Jun 2017 7:58 PM GMT)

பெங்களூருவில், திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில், திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர்

பெங்களூரு எலகங்கா அருகே உள்ள எல்.ஐ.சி. வீட்டு வசதி வாரிய லே–அவுட்டில் வசித்து வந்தவர் அனந்தராமய்யா(வயது 68). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அனந்தராமய்யா தனது வீட்டில் தரைத்தளத்தில் படுத்து தூங்கினார். அவருடைய மகன் தனது மனைவியுடன் முதல் தளத்தில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் மர்மநபர் ஒருவர் அனந்தராமய்யாவின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர், அவர் வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை தேடிக்கொண்டு இருந்தார். இந்த வேளையில், கண்விழித்த அனந்தராமய்யா திருட்டை தடுக்க முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் நுழைந்த மர்மநபரின் மீது பாய்ந்து அவரை பிடித்தார்.

இரும்பு கம்பியால் தாக்கி கொலை

அப்போது, ஆத்திரமடைந்த மர்மநபர் வீட்டில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து அனந்தராமய்யாவை சரமாரியாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்த சூட்கேசை தூக்கி கொண்டு வெளியே ஓடினார். இதற்கிடையே, தாக்குதலில் படுகாயம் அடைந்த அனந்தராமய்யா ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் கதறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடியவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எலகங்கா நியூ டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, தான் வீட்டின் முதல் தளத்தில் தூங்கிய அனந்தராமய்யாவின் மகனும், மருமகளும் கண்விழித்தனர். திருட்டை தடுக்க முயன்றபோது திருடன் தாக்கியதில் அனந்தராமய்யா கொலையானதை அறிந்து அவர்கள் கதறி அழுதனர்.

தொடர் திருட்டு முயற்சி

இதற்கிடையே, போலீசார் வீட்டு அருகே சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது, அனந்தராமய்யாவின் வீட்டுக்கு சிறிது தூரத்தில் அவருடைய வீட்டில் இருந்து தூக்கி செல்லப்பட்ட சூட்கேஸ் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். மேலும், போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், எலகங்கா 4–வது ஸ்டேஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 வீடுகளில் மர்மநபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இந்த திருட்டு முயற்சியின்போது திருட்டை தடுக்க முயன்ற ஒரு தம்பதியின் மகன் முகமது அனாஸ்(12) என்பவனை மர்மநபர் தாக்கிவிட்டு தப்பியோடியதும், காயமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இந்த 4 திருட்டு முயற்சிகளிலும் ஈடுபட்ட நபர் ஒருவராகவே இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வலைவீச்சு

இதுபற்றிய புகார்களின் அடிப்படையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு முயற்சி உள்பட வெவ்வேறு பிரிவுகளின் கீழ் எலகங்கா நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும், அனந்தராமய்யாவை கொலை செய்த மர்மநபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story