குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 7:59 PM GMT)

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

குளித்தலை,

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இரண்யமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 5–வது வார்டு கிழக்கு வலையப்பட்டி பகுதியில் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இப்பகுதிகளில் ஆழ்குழாய் அமைத்து மின்மோட்டார் வைத்து பொருத்தப்பட்டுள்ள 3 பிளாஸ்டிக் தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை. மோட்டார் பழுது எனக்கூறி எடுத்து செல்லப்பட்ட மின்மோட்டார்கள் மீண்டும் பொருத்தப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றின் மூலம் வினியோகிக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதிமக்கள் குடிநீருக்காக கடும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டால் பக்கத்து பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று பனிக்கப்பட்டி சந்தை அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை மண்டல துணை தாசில்தார் முரளிதரன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

அதன்படி அப்பகுதி பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றின் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்ததோடு விரைவில் நிரந்தரமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பனிக்கம்பட்டி பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story