ராமகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்


ராமகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:00 PM GMT (Updated: 21 Jun 2017 8:10 PM GMT)

ராமகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர் அடுப்பு, பாத்திரம், பாய், தலையணையுடன் திரண்டு வந்ததால் பரபரப்பு

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அடுப்பு, பாத்திரம், பாய், தலையணையுடன் திரண்டு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டா கேட்டு மனு

திருச்சி திருவெறும்பூர் தாலுகா பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கவேண்டும், வீடு இல்லாதவர்கள் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிக்கொள்ள பட்டா வழங்க வேண்டும் என கேட்டு, 2014–ம் ஆண்டு முதல் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து வந்தனர். இதுவரை அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.

குடியேறும் போராட்டம்

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 300 பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காட்டூர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குடியேறும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை என தட்டுமுட்டு சாமான்களுடன் வந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தாலுகா அலுவலக மெயின்கேட்டை இழுத்து பூட்டினர்.

ராமகிருஷ்ணன் பேச்சு

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். அவர் பேசுகையில் ‘தமிழகம் முழுவதும் 25 லட்சம் பேர் வீட்டுமனைகேட்டு மனு செய்துள்ளனர். திருவெறும்பூர் பகுதியில் மட்டும் 3 ஆயிரம் பேர் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. எனவே இன்று வீடு இல்லாத மக்கள் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தோம். இதற்காக பெட்டி, படுக்கை, அடுப்பு, அண்டா, குண்டாக்களுடன் வந்து உள்ளோம்.

இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு இங்கேயே தூங்குவோம். அதற்கு முன்னதாக தாசில்தாரிடம் கோரிக்கை பற்றி பேசிவிட்டு வருகிறேன்‘ என்றார்.

தாசில்தாருடன் பேச்சு

ராமகிருஷ்ணன், தாசில்தார் ஷோபாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனே பட்டா கொடுக்க வாய்ப்பு இல்லை. இடங்கள் தேர்வு செய்ய வேண்டும். பயனாளிகள் யார், யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது பட்டா கொடுக்க வாய்ப்பு இல்லை என்றார்.

அப்படியானால் பயனாளிகளுக்கு டோக்கன் கொடுங்கள் என்று ராமகிருஷ்ணன் கேட்டார். அதற்கும் வாய்ப்பு இல்லை என்றதால் ராமகிருஷ்ணன் வெளியே வந்தார். அங்கு மெயின்கேட்டை முற்றுகையிட்டு ராமகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 பேருக்கு பட்டா

இதனைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தபடியே தாசில்தார் ஷோபா தன் உயர் அதிகாரிகளிடம் வெளியே தர்ணா நடப்பது குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் தர்ணா நடக்கும் இடத்திற்கு வந்த தாசில்தார் முதற்கட்டமாக திருவெறும்பூர் தாலுகாவின் தென்பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு 1 மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் சிறிதுநேரம் மீண்டும் அங்கிருந்த மக்களிடம் பேசினார். இதனைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேற்கண்ட சம்பவத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு கலைச்செல்வம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story