‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண் டாக்டரிடம் ரூ.12 லட்சம் மோசடி மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண் டாக்டரிடம் ரூ.12 லட்சம் மோசடி மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2017 9:43 PM GMT (Updated: 21 Jun 2017 9:43 PM GMT)

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண் டாக்டரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண் டாக்டரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் டாக்டர்

மும்பை தாதர் கிழக்கு பகுதியில் 38 வயது பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தாலியை சேர்ந்தவர் என ராட்ரிக்ஸ் ஜான் என்ற பெயரில் ஒருவர் ‘பேஸ்புக்’ மூலம் அறிமுகம் ஆனார்.

அப்போது அவர் தன்னை ஒரு நிறுவனத்தின் இயக்குனர் என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து இருவரும் தங்களது தனிப்பட்ட வி‌ஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

பரிசு பொருள்

இந்தநிலையில் பெண் டாக்டருக்கு, ராட்ரிக்ஸ் ஜான் விலை உயர்ந்த பரிசுப்பொருள் அனுப்பி உள்ளதாகவும், சில தினங்களில் அந்த பார்சல் வந்து சேர்ந்து விடும் என்று தகவல் அனுப்பி இருந்தார். 2 நாட்கள் கழித்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி என ஒருவர் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் ராட்ரிக்ஸ் ஜான் என்பவர் உங்கள் பெயரில் பரிசுப்பொருள் ஒன்றை அனுப்பி உள்ளார். அதனை பெறவேண்டும் என்றால் நீங்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்தார். அதன்பேரில் பெண் டாக்டர் அந்த வங்கிக்கணக்கில் ரூ.47 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் மீண்டும் பேசிய அதே நபர், ‘‘பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு யூரோ டாலர் பரிசாக உள்ளது எனக்கூறி, மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

போலீஸ் வழக்குப்பதிவு

இதை நம்பி அந்த நபர் தெரிவித்த தனித்தனி வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் வரை பெண் டாக்டர் செலுத்தி உள்ளார். அதன்பின்னர் அந்த நபர் போன் செய்து இன்னும் பணம் அனுப்ப வேண்டும் என்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் டாக்டர் விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அவருக்கு எந்த பார்சலும் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் வரை ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், இது குறித்து தாதர் போய்வாடா போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றினர். அவர்கள் பெண் டாக்டரிடம் பணமோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story