தமிழ்நாடு அரசு மக்கள் விரும்பக்கூடிய அரசாக செயல்படவில்லை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழ்நாடு அரசு மக்கள் விரும்பக்கூடிய அரசாக செயல்படவில்லை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2017 9:00 PM GMT (Updated: 22 Jun 2017 6:12 PM GMT)

தமிழ்நாடு அரசு மக்கள் விரும்பக்கூடிய அரசாக செயல்படவில்லை என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழ்நாடு அரசு மக்கள் விரும்பக்கூடிய அரசாக செயல்படவில்லை என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

மாலை அணிவிப்பு

மறைந்த தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் இல்லத்துக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மதியம் வந்தார். அங்கு பெரியசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மகன் ஜெகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், முன்னாள் எம்.பி ராம்பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர் என்.பெரியசாமி. தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கடின உழைப்பாளி. நல்ல பண்பாளர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தனாக இருந்தார். அவருடைய இழப்பு மாவட்டத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

மேலும் சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூர் பெருந்தலைவர் காமராஜர் துறைமுகம் லாபகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.480 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. தனியார் துறைமுகங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த துறைமுகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் சரக்கு கையாளும் திறன், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக தாரைவார்க்க மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மாநில அரசு ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்

தமிழக அரசின் இன்றைய அரசியல் சூழல், ஆட்சியாளர்கள் செயல்பாடு, சட்டமன்ற நடவடிக்கைகள், இவைகள் எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் வேட்பாளர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது த.மா.கா.வின் நிலைப்பாடு. அதுவே மக்கள் நிலைப்பாடாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு இந்தியாவில் தேர்தல் நடைபெறுவது புதிதல்ல. அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், நாங்கள் குறிப்பிட்டு இருக்கும் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையிலேயே ஜனாதிபதியை எல்லா கட்சியும் பார்க்க வேண்டும்.

சேது சமுத்திரம்

இந்தியா முழுவதும் துறைமுகங்களின் செயல்பாடுகள் சுணக்கமாகவே இருக்கிறது. அதனை வேகப்படுத்த வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அதிக வளர்ச்சி தேவை. வெளித்துறைமுகத்தின் பணிகளை விரைவு படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க மத்தியஅரசை, கப்பல்துறையை கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே நிலுவையில், கிடப்பில் உள்ள சேது சமுத்திரம் திட்டத்தின் நிலை என்ன?, அரசை பொறுத்தவரை, தென்மாவட்ட மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் என்றால், தென்மாவட்டத்தில் மென்மேலும் 100 சதவீதம் வளர்ச்சி தேவை என்றால், இந்த திட்டம் அவசியம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த திட்டத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்த தொடங்கி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கக்கூடிய உறுதியான, ஆக்கப்பூர்வமான நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் தொடர் வேண்டுகோளாக உள்ளது.

பலவீனம்

குதிரை பேர அரசியல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலை தமிழக ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால், ஆட்சியாளர்களின் பலவீனத்துக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேறு ஒன்றும் இருக்க முடியாது. மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு மக்கள் விரும்பக்கூடிய அரசாக செயல்படவில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கை இந்த அரசால் நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.


Next Story