சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் இருந்த போது உடன் அமர்ந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் மட்டும் தான்


சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் இருந்த போது உடன் அமர்ந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் மட்டும் தான்
x
தினத்தந்தி 22 July 2017 10:45 PM GMT (Updated: 22 July 2017 8:41 PM GMT)

சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் இருந்த போது உடன் அமர்ந்த முதல்–அமைச்சர் உலகிலேயே எம்.ஜி.ஆர். தான் என்று குமரி அனந்தன் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகியவை நேற்று இரவு திருச்சியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது. இதற்கு எழுத்தாளர் சங்க தலைவர் ஜவகர் ஆறுமுகம் வரவேற்றுப்பேசினார். சிறப்பு விருந்தினராக குமரி அனந்தன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். முதன் முதலாக அமைச்சரவை அமைக்க நாங்கள் (காங்கிரஸ் கட்சி) கூட்டணியாக இருந்தோம் என்பதற்கு பெருமை படுகிறேன். அடிமைப்பெண் படம் நடித்துக்கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர் ஒரு முறை அவரது வீட்டில் என்னிடம் அம்முவை (ஜெயலலிதாவை) கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக போடப்போகிறேன் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு அவரை பொது செயலாளராக போட்டால் தான் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று கூறினேன். அப்போது அவர் என்னை செல்லமாக அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். அதன் பிறகு ஜெயலலிதாவை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எம்,ஜி.ஆர். அறிவித்தார். எனவே ஜெயலலிதா அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக அறிவிக்க நானும் ஒருவனாக இருந்து இருக்கிறேன். தமிழ்நாட்டின் தலைநகராக திருச்சியை மாற்ற எம்.ஜி.ஆர். நினைத்தார். அதே போன்று சத்துணவு திட்டத்தை முதன் முதலில் திருச்சியில் தான் எம்.ஜி.ஆர். அறிவித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று முதன் முதலில் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அவர் குமரி அனந்தன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பதில் நியாயம் இல்லாமல் இல்லை என்று கூறினார். அதன் பிறகு 2½ ஏக்கர் நஞ்சை நிலம், 5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதன் பிறகு கருணாநிதி விவசாயிகளுக்கு முழு இலவச மின்சாரம் வழங்கினார். அதே போன்று பொது மக்கள் கோரிக்கைக்காக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது உண்ணாவிரதம் இருந்தேன். இதை கேள்விப்பட்டு முதல்–அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சம்பவ இடத்திற்கு வந்து என்னுடன் அமர்ந்து பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார். அதன்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் இருந்த போது உடன் அமர்ந்த முதல்–அமைச்சர் உலகிலேயே எம்.ஜி.ஆர் மட்டும் தான்.

இவ்வாறு கூறினார்.


Next Story