டி.என்.பாளையம் அருகே சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்


டி.என்.பாளையம் அருகே சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்
x
தினத்தந்தி 23 July 2017 10:00 PM GMT (Updated: 23 July 2017 6:23 PM GMT)

டி.என்பாளையம் அருகே சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட ‘செட்‘ டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள், மதுபாட்டில்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றார்கள்.

டி.என்.பாளையம்

நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் அமைப்பதற்கு அதிகாரிகள் முயன்றதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி அதை தடுத்தனர். அதனால் பொதுமக்கள் எதிர்ப்புகள் இல்லாத, ஒதுக்குப்புறமான ஒரு சில இடங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் சென்று குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு விட்டன. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் அமைக்க முடியாமல் அதிகாரிகள் கையை பிசைந்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் வேறு எங்கும் டாஸ்மாக் கடை இல்லாததால், கொங்கர்பாளையம் கடையில் எப்போது குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்தநிலையில் கொங்கர்பாளையம் டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் நேற்று காலை ஒரு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டு இருந்தது. டாஸ்மாக் கடை என்ற பெயர் பலகையும் மாட்டப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்த குடிமகன்கள் பலர், ‘ஆஹா ஆடி முதல் அமாவாசை நல்லநாள் என்பதால், புதிதாக டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அமைத்துவிட்டார்கள்‘ என்று மகிழ்ச்சியோடு புதிய டாஸ்மாக் கடைக்கு படையெடுத்தார்கள். சிலர் முண்டியடித்து ஓடி தான் விரும்பி குடிக்கும் மதுவின் பெயரை கூறி கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

அப்போது குடிமகன்கள், ‘ஏன் சார் லேட் பண்றீங்க பாட்டில குடுங்க‘ என்று பணத்தை நீட்டினார்கள். உடனே அங்கிருந்தவர்கள் சிரித்தபடியே, ‘அய்யா இது உண்மையான டாஸ்மாக் கடை இல்லை. நாங்க ‘வீட்டிற்கு நாட்டிற்கு‘? என்ற பெயரில் சினிமா படம் எடுக்கிறோம். அதற்காக டாஸ்மாக் கடை செட் போட்டிருக்கிறோம். எங்களிடம் மதுபாட்டில்கள் இல்லை‘ என்று கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஏமாற்றம் அடைந்த குடிமகன்கள், ‘அடப்பாவிகளா செட்டுபோட்டு ஏமாத்தீட்டீங்களே‘ என்று புலம்பியபடி கூட்டம் நிரம்பி வழிந்த கொங்கர்பாளையம் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினார்கள்.

இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சிலர் சிரித்தபடி சென்றார்கள்.


Next Story