திருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார்


திருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 7 Aug 2017 7:27 PM GMT)

திருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகரில் வசித்துவருபவர் ராமர்(வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். தந்தை இல்லை. ஏழ்மை நிலையில் படித்துவரும் அந்த மாணவன் பழைய சீருடைகளை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருவாராம்.

இதனைப்பார்த்த பள்ளி தாளாளர் ஆரோக்கியம் (38) மாணவனுக்கு புதிய சீருடை வாங்க பண உதவி செய்துள்ளார். பின்னர் மாணவனின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி அவரிடம் செல்போனில் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

நேற்று பள்ளிக்கு வந்த அந்த மாணவனிடம் சக மாணவர்கள் பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டனர். அதற்கு மாணவன் தனக்கு தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறினார். உடனே மாணவர்கள் ஒன்றுதிரண்டு பள்ளி தாளாளருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனையடுத்து பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாளாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். மாலையில் பள்ளி தாளாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.


Next Story
  • chat