விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:45 PM GMT (Updated: 16 Aug 2017 8:55 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில், விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்திடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கொள்முதல் விலை வழங்கிடவேண்டும். நீர்நிலைகளை பாதுகாத்திட ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணேகொள் - வாணிஒட்டில் தடுப்பணை கட்டவேண்டும். படேதலாவ் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்கவேண்டும். தோட்டக்கலை பல்கலைக் கழகத்தை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுகவனம், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தி.மு.க கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் முருகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், முரளிதரன், த.மா.கா. மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், சி.பி.எம். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சி.பி.ஐ. தமிழக விவசாய பிரிவு தலைவர் லகுமய்யா, தி.க. மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவுத் தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்து பேசினார். அதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் விஷ்ணுபிரசாத் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

இதில், தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், நகர செயலாளர்கள் நவாப் (கிருஷ்ணகிரி), மாதேஸ்வரன் (ஓசூர்), ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, கோவிந்தராசு, சுப்பிரமணி, எக்கூர் செல்வம், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஏகம்பவாணன், த.மா.கா. நிர்வாகிகள் காசிலிங்கம், தசரதன் என்ற மனோகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவேந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விசாயிகள் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் வெங்கட்டப்பன் நன்றி கூறினார்.


Next Story