மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 7:39 PM GMT)

மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுதலைப்பூண்டி ஊராட்சி. இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் அங்குள்ள சித்தேரியின் உள்ளே தரை கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு தூர்ந்து போய் கிடந்ததால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெய்த மழையில் ஏரியில் தண்ணீர் பெருகியதால், தரைக்கிணற்றுக்குள் ஏரி நீர் புகுந்து மீண்டும் தூர்ந்து போனது. இதனால் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது.

நீண்ட நாளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மாற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிகுடங்களுடன் மேல்மலையனூர்–சாதம்தம்பாடி சாலையில் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மேல்மலையனூர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மேலும் ஏரியில் உள்ள தரை கிணற்றை மீண்டும் தூர்வார வேண்டும், கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story