இட்டமொழி அருகே வாலிபர் கொலை: மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் சாலைமறியல்


இட்டமொழி அருகே வாலிபர் கொலை: மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:15 PM GMT (Updated: 21 Aug 2017 8:55 PM GMT)

இட்டமொழி அருகே வாலிபர் கொலையில் மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இட்டமொழி பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர். கடந்த 2004–ம் ஆண்டு இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராமனுக்கும் ஏற்பட்ட தகராறில் நடராஜன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள ராமனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த நடராஜன் மகன் கார்த்திக் (வயது 27) சமீபத்தில் ஊருக்கு வந்த போது, நேற்று முன்தினம் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. அவருடன் இருந்த நண்பர் கிருபாகரன் என்பவரையும் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திக் உடலும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கிருபாகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராமன், அவருடைய சகோதரர்கள் பாண்டி, காசி, பாஸ்கர் மற்றும் 3 பேர் சேர்ந்து கார்த்திக்கை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. பெரம்பலூரில் ராமன் வசித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மதியம் ஒரு மணி அளவில் கார்த்திக்கின் குடும்பத்தினர் சுப்பிரமணியபுரத்தில் இட்டமொழி– திசையன்விளை ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், உவரி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், திசையன்விளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கார்த்திக்கேயன், தங்க நாடான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கார்த்திக் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, கார்த்திக்கின் தாயார் அன்னபுஷ்பம், அண்ணன் பொன்குமார் ஆகியோர் போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கார்த்திக் கொலை வழக்கில் இட்டமொழியை சேர்ந்த ராமன் ஆதரவாளர்களான முத்தையா, அவருடைய மகன் பாலகிருஷ்ணன், பெரியசாமி, முத்து மகன் கணேசன், கணேசன் மகன் பெருமாள், சித்திரை பாண்டி ஆகியோரையும் சேர்க்க வேண்டும். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுவரையில் கார்த்திக் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 4 மணி வரை 3 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கார்த்திக்கின் வீட்டின் அருகே உள்ள அவருடைய ஆதரவாளரான மூக்கன் நாடார் என்பவருடைய குடிசை வீடும் நேற்று தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story