அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கிராம மக்கள் முற்றுகை


அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 9:19 PM GMT)

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திட்டச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த குத்தாலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அந்த பகுதியில் சுமார் 65-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யுடன் கூடிய உப்புநீரை சுத்திகரிக்கப்படாமல் பூமிக்கு அடியில் செலுத்துவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உறுதியளித்து, கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி ஆழ்துளை கிணறுகள் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்தும், அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், குத்தாலம், அய்யனார் கோவில்தெரு, புலவநல்லூர், மண்டகமேடு உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று குத்தாலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஊராட்சி கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தராஜன், சேகர், திருநீலகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் நாகராஜன், பக்கிரிசாமி, வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர் உன்னிகிருஷ்ணன், குத்தாலம் பகுதி மேலாளர் ராமசாமி, மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் சந்திரகலா, கிராம நிர்வாக அலுவலர் குழந்தை ஏசுமேரி, நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குத்தாலம் பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் கழிவறை வசதி செய்து தர வேண்டும். குத்தாலம் ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். சாலை வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும். கிராம மைய பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும். திருக்குளக்கறை சாலையை அகலப்படுத்த வேண்டும். குத்தாலம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுவதும் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story