மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் புகார்


மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் புகார்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:38 PM GMT (Updated: 21 Aug 2017 11:38 PM GMT)

மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விஜயபாரத மக்கள் கட்சியினர் கொடுத்துள்ள கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

வேலூர் மாநகரில் உள்ள மருந்துக்கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சில கடைகளில் போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்துடைப்புக்காக சோதனை நடத்திவிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் பாரதிநகரை சேர்ந்தவர் லதா (வயது 31) என்ற நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண் கொடுத்துள்ள மனுவில், தாய், தந்தையை இழந்த நான் கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையை பெற்று வாழ்ந்து வந்தேன். தற்போது கடந்த 2 மாதங்களான எனக்கு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தாலுகா அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தேன். எனினும் நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் கட்சியின் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தலைமையில் கீழ்மின்னல் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் கொடுத்துள்ள மனுவில், நான் அப்துல்லாபுரம் மோட்டூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகே சிலர் ரே‌ஷன் அரிசி கடத்தி வந்தனர். இதுகுறித்து தட்டிக் கேட்டபோது அந்த கும்பல் என்னை தாக்கியது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில், புற உலக சிந்தனையாளர், மூளை முடக்குவாதம், நுண்ணறிவு திறன் மற்றும் மரபுவழி குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பேச்சு மற்றம் மொழிதிறனை மேம்படுத்த மற்றவர்களுடன் கலைந்துரையாடி கற்க ‘ஆவாஸ்’ எனும் சிறப்பு மென்பொருளுடன் கூடிய 2 கையடக்க கணினிகளை (ஐ–பேடு) குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கு கலெக்டர் வழங்கினார்.

Next Story